என் மலர்
ஆப்பிரிக்கா
- தெற்கு மலாவியில் நிலைமை இன்று மோசமடைந்து உள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்து உள்ளது.
- சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி என்கிற நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீசகூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும்.
இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சக அறிக்கை எச்சரித்து இருந்தது.
இதற்கேற்ப சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தெற்கு மலாவியில் நிலைமை இன்று மோசமடைந்து உள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்து உள்ளது.
அந்த அறிக்கையில், இன்று நிலைமை மோசமடைந்து, எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.
இதேபோன்று, பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்த துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார்.
இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 190 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 584 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 37 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
தெளிவற்ற வானிலையால் மீட்பு பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது. நிலைமை நாளை சீரடைய கூடும் என்றும் சூறாவளி கடந்து சென்று விடும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- மடகாஸ்கரில் கடலில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அன்டநானரிவோ:
ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர். அப்போது இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது.
தகவலறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
- அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக உள்ளார்.
- அதிபராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவரது வயது ஒரு காரணமாக கூறப்படுகிறது.
நைரோபி:
ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பயணத்தின் கடைசி கட்டமாக நேற்று கென்யா சென்றார். அங்கு தலைநகர் நைரோபியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக இருப்பதாக கூறினார்.
முன்னதாக, அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தனது நோக்கம் என்று ஜோ பைடன் நீண்ட காலமாக கூறியிருந்தாலும், அவர் அதை இன்னும் அதிகாரப்பூர்வமாக்கவில்லை.
மேலும் அதிபராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவரது வயது ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய பதவிக் காலத்தின் முடிவில் பைடனுக்கு 86 வயது நிரம்பி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொற்று பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
- உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.
வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. மார்பர்க் வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான நோய்க் கிருமியாகும்.
இது கடுமையான காய்ச்சலை அடிக்கடி இரத்தப்போக்குடன் ஏற்படுத்துகிறது. மேலும் பல உறுப்புகளை பாதிப்படைய செய்து, உடலின் செயல் திறனைக் குறைக்கிறது. இதுவரை 16 பேருக்கு அறிகுறிகள் பதிவாகியுள்ளன.
மேலும், பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது பிலோ வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.
இதில் எபோலா வைரஸும் அடங்கும். இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மார்பர்க் கிருமியின் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த வித சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது மோதியது.
- விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தது.
காப்ரீன்:
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் உள்ள காப்ரீன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் டயர் பஞ்சரானது. இதனால் தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தது. இதில் 40 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு செனகல் நாட்டு அதிபர் மேக்கிசால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். விபத்தில் 40 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டுகிறேன். இன்று முதல் 3 நாட்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கபடும் என அவர் கூறினார்.
செனகல் நாட்டில் மோசமான சாலைகளாலும், போக்குவரத்து விதிமுறைகளை டிரைவர்கள் சரியாக கடைபிடிக்காததாலும் இது போன்று விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார்.
- திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து மணப்பெண் பேசி இருக்கிறார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதும், அவருடன் மணப்பெண் வாக்குவாதம் செய்து அழுது புரண்டு கெஞ்சுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அங்கு ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து அந்த பெண் பேசி இருக்கிறார்.
இந்த தகவல் மணமகனின் காதுக்கு எட்டியது. இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். அடாவடியாக திருமணத்தை நிறுத்தினார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மணமகனிடம் ஒரு ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டு கெஞ்சி இருக்கிறார். ஆனால் மணமகனோ அவரை ஏற்க மறுத்து ஆவேசமாக பேசுகிறார்.
இதுதொடர்பாக விசாரித்தபோது காதலனை மணப்பெண் சந்தித்த தகவலை மணப்பெண்ணின் தோழியே மணமகனிடம் போட்டுக் கொடுத்தது தெரிய வந்தது. மணமகள் கெஞ்சும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- பர்கினோ பாசோவில் போகோஹரம், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
- இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்கடங்கு:
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், பர்கினோ பாசோவின் வடக்கே உள்ள போலா பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் அங்கிருந்த அனைவரும் அலறியவாறு ஓட்டம் பிடித்தனர்.
இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. விசாரணையில், ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பொதுமக்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
- ஜிம்பாப்வே முதல் முறையாக சிறிய அளவிலான நானோ செயற்கைகோளை விண்ணில் ஏவியது.
- ஜிம்சாட்-1 தற்போது விண்வெளியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே முதல் முறையாக சிறிய அளவிலான நானோ செயற்கைகோளை விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டில் ஜிம்சாட்-1 என்று பெயரிடப்பட்ட நானோ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. மேலும் ஜப்பான் விண்வெளி கழகத்தின் பல நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக உகாண்டாவின் முதல் செயற்கைகோளும் ஏவப்பட்டது.
இது தொடர்பாக ஜிம்பாப்வே அரசின் செய்தி தொடர்பாளர் நிக் மங்வானா டுவிட்டரில் கூறும்போது, வரலாறு விரிவடைகிறது. ஜிம்சாட்-1 தற்போது விண்வெளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு ஒரு அறிவியல் மைல்கல் என்றார். ஜிம்பாப்வே ஏவிய நானோ செயற்கைகோள், பேரிடர்களை கண்காணிக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும், கனிம வளத்தை மேம்படுத்தவும் உதவும்.
- நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
- கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர்.
நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது.
அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தினர்.
அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல், இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை தடுத்து நிறுத்தியது. பின்னர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்தனர். இதில் கேரளாவை சேர்ந்த 3 மாலுமிகளும் உள்ளனர்.
நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்திய மாலுமிகளும் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- மத்திய ஆப்பிரிக்கா நாடான சாத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- என்டிஜாமேனாவில் போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர்.
சாத்:
மத்திய ஆப்பிரிக்கா நாடான சாத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கிய நகரங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் என்டிஜாமேனாவில் போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்கள் மீது பாதுகாப்பு போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுகாயம் அடைந்த 30 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் அந்த நாட்டின் 2-வது பெரிய நகரமான மவுண்டோவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 30 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்கான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
- இந்திய இருமல் சிரப் மருந்துகளின் பயன்பாடு கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலும் உயிரிழப்பு இல்லை என காம்பியா நாடு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தது.
அரியானாவை சேர்ந்த மெய்டன் என்ற மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக புரோ மெத்சைன், முகா பெல்ஸ்மாலின் மகாப் மேக்தின் என்ற 4 மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மருந்தில் டயத்லைன் கிளை கோசில் மற்றும் எதிலன் கிளைகோசில் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளதை தொடர்ந்து மத்திய அரசு இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்கான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்த விவகாரத்தில் உண்மைகள் மற்றும் விவரங்களை கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, 4 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய இருமல் சிரப் மருந்துகளின் பயன்பாடு கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலும் உயிரிழப்பு இல்லை என காம்பியா நாடு தெரிவித்துள்ளது. மேலும், சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு ஏராளமான குழந்தைகள் இறந்த நிலை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்று காம்பாய அதிபர் அடாமா பாரோ தெரிவித்துள்ளார்.
- இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள சீனாவின் போர்க்கப்பல்களுக்கு உதவியாக இருக்கும்.
- இந்திய வான்வெளி பரப்பில் உள்ள செயற்கை கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் சீனா தனது ராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
இதன் முதல் கட்டமாக வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான ஜிபூட்டியில் சீனா கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 4,700 கோடி செலவில் கடற்படை தளத்தை அமைக்கும் பணியை தொடங்கியது. 6 ஆண்டுகளாக நடந்த இந்த பணி தற்போது முடிவடைந்து உள்ளது.
இதையடுத்து இந்த கடற்படை தளம் முழுமையாக செயல்பட தொடங்கி இருக்கிறது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் பலமான கட்டமைப்பை இது கொண்டுள்ளது. எந்தவித நேரடி தாக்குதலையும் தாங்கும் வகையில் இந்த கடற்படைதளம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவதளம் ஆகும்.
இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள சீனாவின் போர்க்கப்பல்களுக்கு இது உதவியாக இருக்கும். இதற்கான செயற்கைகோள் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த ஜிபூட்டி கடற்படை தளம் மூலம் சீனா தனது ராணுவ படைகளை நிலை நிறுத்தவும், எதிரி நாடுகளை உளவு பார்க்கவும் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.
இந்திய வான்வெளி பரப்பில் உள்ள செயற்கை கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் சீனா முதல் முறையாக வெளிநாட்டில் கடற்படைதளத்தை அமைத்து உள்ளதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
வருங்காலத்தில் உலகம் முழுவதும் நட்பு நாடுகளிலும் தன்னுடைய ராணுவ தளத்தை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டு உள்ளது.






