என் மலர்
உலகம்

300 பில்லியன் டாலர்: அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க Reliance உடன் ஒப்பந்தம் - டிரம்ப்
- இந்தியாவில் உள்ள எங்களது கூட்டாளிகளுக்கு நன்றி.
- குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ரிலையன்ஸ் நடத்தி வருகிறது.
அமெரிக்காவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில் போர்ட் பகுதியில் இந்த பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் இந்த மெகா திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முக்கியப் பங்காளராக இணைந்துள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் சுத்திகரிப்பு நிறுவனம் திறக்கப்பட போகிறது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த சாதனை இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதலீட்டின் உதவியோடு கிடைத்தது எனக் கூறியுள்ளார்.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க 300 பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 லட்சம் கோடி) ஒப்பந்தம் என சுட்டிக்காட்டி இருக்கும் டிரம்ப் அமெரிக்க வரலாற்றிலேயே இது மிகப்பெரிய ஒப்பந்தம் இது என தெரிவித்திருக்கிறார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில் மேலும் அவர் கூறியதாவது, "இந்தியாவில் உள்ள எங்களது கூட்டாளிகளுக்கும், அங்கிருக்கும் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், இந்த மிகப்பெரிய முதலீட்டை மேற்கொண்டதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவிலும் கால் பதிக்க உள்ளது.
ஈரான் போருக்கு மத்தியில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






