search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதித்த போர்ட்டோ ரிகோ தீவுக்காக கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்திய டிரம்ப்
    X

    புயல் பாதித்த போர்ட்டோ ரிகோ தீவுக்காக கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்திய டிரம்ப்

    மரியா புயலால பேரழிவை சந்தித்த போர்ட்டோ ரிகோ தீவுக்கு நிவாரணப் பொருட்களை எளிதில் சப்ளை செய்யும் வகையில் கப்பல் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தளர்த்தி உள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் உருவான ‘மரியா’ புயல் டொமினிகா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவுகளை துவம்சம் செய்தது. அதன்பின்னர் அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடுமையாகத் தாக்கியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தினால் சாலைகள் முழுவதும் மூடப்பட்டன. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்த புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பேரழிவானது, முன்னெப்போதும் இல்லாத இயற்கை பேரழிவு என்று போர்ட்டோரிகோ கவர்னர் ரிகார்டோ ரோசல்லோ கூறியுள்ளார்.

    மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் முழுமையாக சென்று சேரவில்லை. எரிபொருள், உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.



    இந்நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொண்டு வருவதற்காக கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அமெரிக்காவுக்கு போர்ட்டோ ரிகோ கவர்னர் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக நீக்கியுள்ளார். இதன்மூலம் பிற நாட்டு கப்பல்களும் அந்த தீவுக்குச் சென்று பொருட்களை சப்ளை செய்ய முடியும்.

    ஜோன்ஸ் சட்டத்தின்படி, அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையே வெளிநாட்டு கொடி தாங்கிய கப்பல்கள் எரிபொருட்களை ஏற்றுவதற்கும் விநியோகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×