என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் தவிர்க்கப்பட்டது ஏன்? பெயிண்ட் தீர்ந்துவிட்டதா? - சீமான் கேள்வி!
    X

    அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் தவிர்க்கப்பட்டது ஏன்? பெயிண்ட் தீர்ந்துவிட்டதா? - சீமான் கேள்வி!

    • தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு?
    • அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 'தமிழ்நாடு' என்ற பெயர் அழிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    "ஆரம்ப காலங்களில் 'தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்றே அரசுப்பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? வண்ணப்பூச்சு தீர்ந்துவிட்டதா? அல்லது அரசுக்கு தெரியாமல் வண்ணப்பூச்சு ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா? அல்லது போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்பட்டுவிடுமா?

    இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும், திமுக அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதிகாப்பது ஏன்?. யாருடைய உத்தரவின் பேரில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்படுகிறது? தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு? இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!

    தமிழ்நாடு என்ற பெயர் ஒவ்வொரு தமிழனின் உயிர் மூச்சு. இச்சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி தன்னுடைய இன்னுயிர் ஈந்தார். கர்நாடகா, கேரளா, தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?

    போக்குவரத்து கழகப் பெயரிலிருந்து தமிழ்நாடு என்பதை திமுக அரசு நீக்கி இருப்பதன் மூலம் 'தமிழ்நாடு' என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம் என்று வம்படியாக அறிவித்தது தற்புகழ்ச்சிக்கானதே தவிர, தமிழ்நாடு என்ற பெயரின் மீதான பற்றுதலினால் அல்ல என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நாங்கள்தான் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்ற பெயரையே வைத்தோம் என பொய்ப்பெருமை பேசும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பாரா?

    ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழ்நாடு அரசுப்பேருந்துகள் அனைத்திலும் 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்' என்று முழுமையாக எழுத வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், 'தமிழ்நாடு' பெயர் காக்க நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×