என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வில் இணையும் அடுத்த அரசியல் பிரமுகர் யார்?
- புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் விஜய் சில நிமிடங்களே பேசியது பேசுபொருளான நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக விஜய் பேசி அசத்தினார்.
- மற்ற இடங்களில் நடந்த த.வெ.க. கூட்டங்களை ஒப்பிடுகையில் ஈரோடு பொதுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்துள்ளது.
அ.தி.மு.க. மூத்த நிர்வாகியாக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா போன்றவர்களை ராமநாதபுரம் பசும்பொன்னில் சந்தித்து பேசினார். இதன் காரணமாக செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்தார். திடீரென தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்து அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
விஜயும் அவரை அரவணைத்து செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார். த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் என 2 பதவிகளை விஜய் வழங்கி கவுரவித்தார்.
கட்சியில் சேர்ந்த உடன் செங்கோட்டையன் தனது சொந்த ஊரான ஈரோட்டில் தனது செல்வாக்கை காட்ட திட்டமிட்டார். இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்தை விஜய் தலைமையில் நடத்த முடிவு செய்தார். இதற்காக ஒவ்வொரு நிகழ்வையும் அவர் திட்டமிட்டு நடத்தினார்.
போலீசார் பொதுக்கூட்டத்துக்கு 80-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்தனர். அதனை பார்த்து சோர்வடையாமல் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பணியாற்றி ஈரோடு விஜயமங்கலத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார்.
இதில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். விஜய் பேசுகையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பணிகளையும் குறிப்பிட்டு பேசினார். அண்ணன் செங்கோட்டையன் கட்சியில் இணைந்துள்ளது நம் கட்சிக்கு மிகப்பெரிய பலம் என்று புகழ்ந்து பேசினார். அதற்கு முன்னதாக பேசிய செங்கோட்டையன், விஜய்க்கு புரட்சித்தளபதி என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து விஜய்க்கு செங்கோட்டையன் செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மற்ற இடங்களில் நடந்த த.வெ.க. கூட்டங்களை ஒப்பிடுகையில் ஈரோடு பொதுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்துள்ளது. இதற்கு செங்கோட்டையனின் சரியான திட்டமிடுதலே காரணமாகும். மேலும் விஜய்யின் பேச்சிலும் அனல் தெறித்தது. புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் விஜய் சில நிமிடங்களே பேசியது பேசுபொருளான நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக விஜய் பேசி அசத்தினார். இதற்கும் செங்கோட்டையன் பல ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.
விஜய் கூறுகையில், அண்ணன் செங்கோட்டையன் நம்ம கூட வந்து சேர்ந்தது நமக்கு மிகப்பெரிய பலம். அவரை மாதிரி இன்னும் நிறையபேர் வந்து சேர இருக்கிறார்கள். அவங்க எல்லோருக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம் என்றார்.
விஜய்யின் இந்த பேச்சால் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு த.வெ.க.வில் சேர தயங்கியபடி இருந்த பலரின் மனநிலை செங்கோட்டையனுக்கு அந்த கட்சியில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தாலும், ஈரோடு பொதுக்கூட்ட எழுச்சியாலும் தற்போது மாறியுள்ளது.
இதனால் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கு பிறகு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் த.வெ.க.வில் சேர வாய்ப்புள்ளது. அவர்கள் எந்த கட்சியில் இருந்து வர உள்ளனர், அவர்கள் யார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அதனை அறிய த.வெ.க.வினர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேலும் ஈரோடு பொதுக்கூட்ட வரவேற்பு விஜய்யை அதிகம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன்காரணமாக பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களுடன் அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார். அடுத்த பொதுக்கூட்டத்தை கொங்கு மண்டலமான சேலத்தில் ஏற்பாடு செய்வதற்கு விஜய் விரும்பி உள்ளார். இதற்காக வருகிற 30-ந் தேதி அங்கு பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.






