என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மருத்துவர்கள் நியமனம் மீது எப்போதுதான் கவனம் செலுத்தும் திமுக அரசு?- நயினார் நாகேந்திரன்
    X

    மருத்துவர்கள் நியமனம் மீது எப்போதுதான் கவனம் செலுத்தும் திமுக அரசு?- நயினார் நாகேந்திரன்

    • "உலகமே பாராட்டும் மருத்துவக் கட்டமைப்பு இது" என்று திராவிட மாடல் அரசு விளம்பரம் செய்வது அநியாயம்.
    • ஜனங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றும் எண்ணத்தோடு செயல்பட்டு, காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் திருப்பூர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளரே சிகிச்சை அளித்த அவலம் நிகழ்ந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

    தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையால் நிகழும் மரணங்கள் தொடர்கதையாகி, தற்போது வழக்கமான பெட்டி செய்தியாகிவிட்ட நிலையில், மருத்துவர்கள் நியமனம் மீது எப்போதுதான் கவனம் செலுத்தும் திமுக அரசு?

    உயிரைப் பறிக்கும் மரணக் கூடங்களாகவும், புகார்களின் புகலிடமாகவும் அரசு மருத்துவமனைகளை மாற்றியமைத்து விட்டு "உலகமே பாராட்டும் மருத்துவக் கட்டமைப்பு இது" என்று திராவிட மாடல் அரசு விளம்பரம் செய்வது அநியாயம்.

    இது போன்ற நிகழ்வுகள் குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் எதோ ஒரு எண்களைக் கூறி, "இதோ நியமனம், அதோ நியமனம்" என வார்த்தை ஜாலம் செய்வதைத் தவிர்த்து, ஜனங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றும் எண்ணத்தோடு செயல்பட்டு, காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    "நாடு போற்றும் நல்லாட்சி" என்று பெருமிதம் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் மக்கள் நலனைக் காக்கும் அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×