என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பருவமழையின்போது மக்களுக்கு போட்டி போட்டு உதவ வேண்டும்- தி.மு.க.வினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
    X

    பருவமழையின்போது மக்களுக்கு போட்டி போட்டு உதவ வேண்டும்- தி.மு.க.வினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

    • மக்கள் பிரச்சனை எப்போது எங்கு இருந்தாலும் தி.மு.க அங்கு மக்களோடு உடன் இருக்கும்.
    • அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க.வினர் நிவாரண பணிகளில் ஈடுபடுவது குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மேயர்கள் பிரியா (சென்னை), வசந்தகுமாரி (தாம்பரம்), உதயகுமார் (ஆவடி), துணை மேயர்கள், கவுன்சிலர்கள்.

    மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, ஆர்.டி. சேகர், மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் ஜெ.கருணாநிதி, ஆயிரம்விளக்கு எழிலசன், பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமு வேல், எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி, வெற்றியழகன், தாயகம் கவி, பரந்தாமன், அண்ணாநகர் மோகன், பிரபாகர்ராஜா.

    எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டியன், தயாநிதி மாறன், கனிமொழி சோமு, மண்டல குழு தலைவர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தி.மு.க நிர்வாகிகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

    அந்தந்த வார்டுகளில் மழையால் பாதிக்கப்படும் நபர்கள் இருந்தால் அவர்களை கண்டறிந்து உடனே உதவ வேண்டும். நிவாரண உதவிகள் அவர்களுக்கு கிடைக்கவும் நீங்கள் துணை நிற்க வேண்டும். பாதிக்கப்படும் அனைத்து பொதுமக்களுக்கும் களத்தில் இறங்கி உதவி செய்ய வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் மழை முடியவில்லை. இன்னும் 2 நாட்கள் கழித்து இன்னொரு மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அது வலுவடைய வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

    எனவே அதிகளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி ஒரு சூழல் வந்தால் அதை நாம் எல்லோரும் சேர்ந்து எப்படி எதிர்க்கொள்வோம். மக்களை எப்படி காப்பாற்றுவோம் என்பதற்கான ஆலோசனை கூட்டம்தான் இந்த கூட்டம்.

    பேரறிஞர் அண்ணா நமக்கு சொல்லி கொடுத்தது என்னவென்றால் எப்போதுமே மக்களிடம் செல், மக்களிடம் பழகு, மக்களோடு பேசு, மக்களுக்கு சேவை செய், மக்களுக்கு என்ன தேவையோ அதை செய் என்று சொன்னார்.

    அவரது வழியில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். நாம் பல இடங்களுக்கு போகும் போது சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு மணி நேரம் வெயில் அடித்தால், மழை நின்றால் தண்ணீர் வடிந்து விடுகிறது.

    மழை தண்ணீர் நிற்கும் போது அந்த பகுதியில் உள்ள மக்கள் கூப்பிடுகிறார்கள். வந்து பாருங்கள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் கோபத்தோடு கூப்பிடவில்லை.

    சிரித்த முகத்தோடுதான் கூப்பிடுகிறார்கள். நீங்கள் வந்து பார்த்தால் சரியாகி விடும் என்று அழைக்கிறார்கள். முதலமைச்சரின் கவனத்துக்கு இப்பிரச்சனை சென்றால் சரியாகி விடும். மக்கள் பிரதிநிதிகள் கவனத்துக்கு சென்றால் சரியாகி விடும் என்று நம்பிக்கையோடுதான் அழைக்கிறார்கள்.

    எனவே இந்த பருவமழையின் போதும் மக்களோடு நாம் நின்றோம் என்பதை இந்த மழையில் நாம் நிரூபித்து காட்ட வேண்டும்.

    தேர்தல் வரக்கூடிய நிலையில் அதற்காக நடைபெறுகின்ற ஒரு ஆலோசனை கூட்டம் என நினைக்க வேண்டாம். அது நிச்சயமாக இல்லை. ஒரு வெள்ளத்திற்கு முன்பும் ஒவ்வொரு பேரிடருக்கு முன்பும் இது போன்ற பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளோம்.

    குறிப்பாக கொரோனா காலத்தில் மக்கள் உடன் நின்று இருக்கிறோம். அந்த அடிப்படையில் தான் நம் மக்கள் வாக்களித்து நம்மை ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள். கொரோனா காலத்தில் நம்முடைய தலைவர் தான் முன் களப்பணியாளராக முன் நின்று இருக்கிறார்.

    இன்று தைரியமாக பொதுமக்களை சந்திக்க போகிறோம் என அனைத்து மக்கள் பிரதிநிதிகள் சொல்லி வருகிறார்கள். அத்தனை பணிகளை இந்த அரசு மேற்கொண்டு உள்ளது.

    மக்கள் பிரச்சனை எப்போது எங்கு இருந்தாலும் தி.மு.க அங்கு மக்களோடு உடன் இருக்கும். இயற்கை பேரிடர்கள் எதுவாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்களுடன் முதலமைச்சர் நிற்கிறார். நமக்கு கூடுதல் பெறுப்பு தற்போது இருக்கிறது.

    2015-ம் ஆண்டு பெரிய மழையாக இருந்தாலும், புயலாக இருந்தாலும் சரி வர்தா புயலாக இருந்தாலும் சரி பேரிடர் காலத்தில் தி.மு.க முன் களப்பணியாளராக நின்று மக்களை காப்பாற்றி உள்ளோம். நிவாரண பணிகள் வழங்கப்பட்டு மக்களுடன் ஒன்றாக இருந்தோம். சுழன்று நம் பணியை மேற்கொண்டு இருக்கிறோம்.

    தற்போது சோசியல் மீடியா, தொலைக்காட்சிகள் அதிகமாக உள்ளது. மக்களுக்கு பிரச்சனை இருந்தால் களத்திற்கு சென்று உண்மை நிலவரத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் பகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

    மழை காலத்தில் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், பாதுகாப்பு முக்கியம். அவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. உணவு கூடங்களில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகாம்களுக்கு வர தயங்கும் மக்களை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கும் பொறுப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது. மக்களிடம் பேசும் போது கண்ணியத்துடன் கவனத்துடனும் பேச வேண்டும். கவனத்துடன் மக்களை அணுக வேண்டும்.

    தி.மு.க. நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை மக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே நேர்கோட்டில் நாம் செயல்பட்டால் தான் அரசுக்கும் தி.மு.க.விற்கும், முதலமைச்சருக்கும் பெருமை சேர்க்கும். மேயர், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் போன்றவர்கள் மீட்பு மற்றும் முகாமில் முறையாக கண்காணிக்க வேண்டும்.

    நாம் அனைவரும் களத்தில் நிற்க வேண்டும். தொடர்ந்து முதலமைச்சர் கண்காணிப்பார். ஒவ்வொருவரையும் அவர் கண்காணிப்பார்.

    இந்த மழை காலத்தில் மட்டுமல்ல இனி வரும் ஒவ்வொரு நாளும் உங்களுடைய செயல்பாடுகள் மிக மிக முக்கியமாக இருக்க வேண்டும்.

    போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். இதுதான் தி.மு.க.விற்கும், கருப்பு சிவப்பு கொடிக்கும், நம்முடைய தலைவருக்கு நாம் சேர்க்கும் பெருமை. எத்தனையோ பேரிடர், பெருமழையிலும் நம்முடைய மக்களை காப்பாற்றி உள்ளோம். இந்த மழை காலத்தில் மக்களுடன் நின்று அவர்களை காப்பாற்றுவோம் என்றார்.

    Next Story
    ×