என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இரட்டை இலை விவகாரம்- வரும் 28ம் தேதி விசாரணையை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்
    X

    இரட்டை இலை விவகாரம்- வரும் 28ம் தேதி விசாரணையை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்

    • எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
    • புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.

    அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.

    அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

    இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×