என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மாநாடு பணிகள் மும்முரம்
- மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட இருக்கிறது.
- மாநாட்டிற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் மாநாடு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மதுரை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் முதன் முறையாக தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாநாடு 4 நாட்களுக்கு முன்னதாக 21-ந் தேதி நடைபெறும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் மாநாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் பிரம்மாண்ட விழா மேடை, விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் நடந்து சென்று சந்திப்பதற்கான 'ரேம்ப் வாக்' நடைமேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் பணி நிறைவு பெற்றுள்ளது.
ஒலி, ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள், மின்விளக்குகள் சில இடங்களில் பொருத்தப்பட்டு அதற்கான மின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநாட்டின் பிரமாண்ட முகப்பு ஆர்ச் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல மூன்று இடங்களில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட இருக்கிறது. மற்ற மாநாடுகளை விட இந்த மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் தண்ணீர் தாகம் தீர்க்கும் விதமாக சுத்திகரிக்கட்ட குடிநீர் வினியோகம் 24 மணி நேரமும் செயல்படுத்த முடிவு செய்ததை தொடர்ந்து நிலத்திற்கு அடியில் பத்தாயிரம் அடிக்கு பைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளது.
1000-க்கும் மேற்பட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்கு புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணிகளும் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும் நிலையில் பின்னர் குழாய் மூலம் திறந்து விடப்பட்டு தண்ணீர் முறையாக செல்கிறதா என்கிற சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் கட்சி மாநாடு ஏற்பாடு பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் ஒரு லாரிக்கு 40 ஆயிரம் லிட்டர் வீதம் 40 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் லாரிகள் மாநாட்டுத் திடலில் நிறுத்தப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் விஜய் பலத்தை நிரூபிக்க நடத்தப்படும் த.வெ.க. 2-வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் மாநாடு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது மாநாட்டு திடல் முழுவதும் த.வெ.க. கொடிகள் கட்டப்பட்டு பட்டொளி வீசி பறப்பது அந்த வழியாக செல்வோரை வெகுவாக ஈர்த்து வருகிறது.






