என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
- மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
- மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.
Live Updates
- 21 Aug 2025 6:02 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பாசிச பாஜகவுடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி வைக்க நாம் என்ன உலகமகா ஊழல் கட்சியா?" என்று திமுக, அதிமுகவை விஜய மறைமுகமாக விமர்சித்தார்.
- 21 Aug 2025 6:02 PM IST
விஜய் கூறிய புதிய திட்டம்:
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். திட்டங்களை அறிவிக்கிறேன். பெண் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தான் நமது முதன்மை அக்கறை. இளைஞர்கள், உழவர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களுக்காக அரசு அமைப்பதே நமது நோக்கம்" என்று தெரிவித்தார்.
- 21 Aug 2025 5:58 PM IST
நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்து விடுங்கள்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பிரதமர் மோடி அவர்களே முரட்டு பிடிவாதத்தால் நீங்கள் கொண்டு வந்த நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்து விடுங்கள். எங்களுக்கு தேவையானதை செய்யாமல் ஆட்சி அதிகாரத்தை எதற்காக கையில் வைத்துள்ளீர்கள் பிரதமர் மோடி அவர்களே. மக்கள் சக்தியே இல்லாத கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசு பயணம் மேற்கொள்ள நினைக்கிறீர்களா என பிரதமர் மோடிக்கு விஜய் கேள்வி எழுப்பினார்.
- 21 Aug 2025 5:56 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பாஜகவின் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் அவர்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளது. தமிழக மீனவர்கள் 800-க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் தாக்கி அழிக்கப்படுகின்றனர். உங்கள் நடவடிக்கை என்ன? தமிழக மீனவர்களை காக்க கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டுக்கொடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு விஜய் வேண்டுகோள் விடுத்தார்.
- 21 Aug 2025 5:48 PM IST
மதுரை மாநாட்டில் குட்டி கதை கூறிய விஜய்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்க பலமாக இருக்க ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகின்றனர். அதில் ஒருவர் தான் தேர்வாக வேண்டும். ஆனால் 10 பேர் தேர்வாகியிருப்பதால், அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அவர்களிடம் 3 மாதத்தில் இதை நன்றாக வளர்த்து கொண்டு வாருங்கள் என கூறி விதை நெல்லை கொடுத்து அனுப்புகிறார். 3 மாதம் கழித்து வரும்போது, அதில் ஒருவர் அந்த விதை நெல்லை ஆளுயரத்துக்கும், மற்றொருவர் தோள் உயரத்துக்கும் என 9 பேர் நன்றாக வளர்த்து கொண்டு வந்தனர்.
அதில் ஒருவர் மட்டும் வெறும் கையுடன் வந்தார். என்ன என கேட்டபோது, ‘நானும் தண்ணீர் ஊற்றி ஊற்றி பார்க்கிறேன். நெல் வளரவேயில்லை’ என்றார். உடனே ராஜா அவரை கட்டியணைத்து நீ தான் என்னுடைய தளபதி, எல்லா அதிகாரமும் உனக்கு தான் என்றார். காரணம் 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல். அது ஒருபோதும் முளைக்காது.
ஆக அந்த 9 திருட்டு பயல்களும் வேறு விதை நெல்லை வாங்கி வளர்த்து, ராஜாவையும், மக்களையும் ஏமாற்றியிருந்த நிலையில், அதில் ஒருவர் மட்டும் உண்மையை உடைத்துவிட்டார். ஒரு நாட்டுக்கு திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உண்மையும், நேர்மையும் முக்கியம். அந்த வகையில் நீங்கள் எல்லோரும் தான் அந்த ராஜா, நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த தளபதி...” என்று தெரிவித்தார்.
- 21 Aug 2025 5:43 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர், விஜய்... மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர், விஜய்... என்று தவெகவின் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாகச் சொல்லி, "நான் வேறு எனது வேட்பாளர்கள் வேறு அல்ல" என்று ட்விஸ்ட் வைத்து விஜய் பேசினார்.
- 21 Aug 2025 5:41 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர். 2026ல் யாருக்கு ஓட்டு போடனும்னு அந்த அப்பழுக்கற்ற அதிமுக தொண்டர்களுக்கு நல்லாவே தெரியும்" என்று தெரிவித்தார்.
- 21 Aug 2025 5:40 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "வாழ்நாள் முழுக்க மக்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு எண்ணம் இல்லை. எனக்கு இப்போ வேற வேலையும் இல்லை" என்று தெரிவித்தார்.
- 21 Aug 2025 5:39 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "அம்பேத்கரை, காமராஜரை, நல்லக்கண்ணு அய்யாவை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதி. எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது. எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது" என்று தெரிவித்தார்.







