என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியாவில் 11-வது இடம்: தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த காலாண்டைவிட குறைவு
- கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
- தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை:
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாக வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்த வேலையின்மை விகிதம் என்பது வேலை செய்யத் தகுதி மற்றும் விருப்பம் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் சதவீதத்தை குறிக்கிறது.
பொருளாதார மந்தநிலை, கணினி மயமாக்கல், குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்படுவது, சிறந்த ஊதியத்துடன் வேலையை தேடுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால் இந்த வேலையின்மை விகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவ்வப்போது அதிகரிக்கும், குறையும். இதனை சரியாக கையாளும் மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தை சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வைத்திருக்கும்.
இதற்கான புள்ளி விவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ.), காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) வாயிலாக ஒவ்வொரு காலாண்டுக்கும் அதாவது ஆண்டுக்கு 4 முறை அறிக்கையாக வெளியிடுகிறது.
அதன்படி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டுக்கான புள்ளி விவர அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வேலையின்மை விகிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
அந்தவகையில், கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது 5.7 சதவீதமாக இருக்கிறது. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது.
அதில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதற்கடுத்தபடியாக கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதற்கு உதாரணமாக, நடப்பாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதமாக இருந்து, அது 3-வது காலாண்டில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2024) இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும் நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற அதிக தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை என்பது உகந்த வரம்பாக பார்க்கப்படுகிறது.
அதாவது, பொருளாதாரத்தை அதிக பணவீக்கத்திற்கு கொண்டு செல்லாமல், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வேலையின்மை விகிதமே சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.






