என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மெரினா சர்வீஸ் சாலையில் ஆயிரம் புன்னை மரங்கள் நட முடிவு- மாநகராட்சி அதிகாரி தகவல்
- பசுமை சென்னை திட்டத்தின் கீழ் மரங்கள் நடுதல், தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
- சர்வீஸ் சாலையில் மரங்கள் அமைத்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. பசுமை சென்னை, தூய்மை சென்னை, எழில்மிகு சென்னை ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், பசுமை சென்னை திட்டத்தின் கீழ் மரங்கள் நடுதல், தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பசுமை சென்னையின் கீழ் தீவிர தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, மெரினா கடற்கரையை அழகுபடுத்தி, பசுமை பரப்பை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தளமான மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையில் ஒருசில இடங்களில் மட்டுமே மரங்கள் உள்ளது. மற்ற இடங்களில் மரங்கள் இல்லாமல் வெறுமையாக காட்சி அளிக்கிறது. சர்வீஸ் சாலையை ஒட்டிய பூங்காக்கள் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
சர்வீஸ் சாலையில் மரங்கள் அமைத்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே, பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் சர்வீஸ் சாலையை ஒட்டிய பகுதிகளில் புன்னை மரங்களை நடுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, மெரினா நீச்சல் குளம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் ஆயிரம் புன்னை மரங்கள் நடப்பட உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரங்கள் நடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரை பகுதியை பசுமையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு சர்வீஸ் சாலையின் 2 பக்கங்களிலும் ஆயிரம் புன்னை மரங்கள் நடப்பட உள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கும்.
ஒவ்வொரு இடத்திலும் 6 அடி முதல் 7 அடி வரையில் வளர்ந்த புன்னை மரங்கள் நடப்படும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளினால் சேதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பான தடுப்புகள் அமைக்கப்படும். புன்னை மரம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரம். கடற்கரை பகுதிகளில் இது பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. அதனாலேயே புன்னை மரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியே இதை பராமரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






