என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்- உதயநிதி ஸ்டாலின்
- முதலமைச்சர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.
- லால்குடியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உறுதுணையாக இருக்கணும்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.89 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
மேலும், அதன் அருகாமையில் ரூ.4.69 கோடி செலவில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இந்த புதிய பஸ் நிலையம் மற்றும் நகராட்சி கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகரத்திற்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஊர் எது என்று கேட்டால், அது நிச்சயமாக இந்த லால்குடிதான். இன்னும் சொல்லப்போனால், தமிழுக்காக கலைஞர் கண்ட கழகத்திற்கு மூன்று அமைச்சர்களைத் தந்த பெருமைக்குரிய ஊர் இந்த லால்குடி.
பேரறிஞர் அண்ணாவுக்கும், கலைஞருக்கும், மிக நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
அதேபோல், இப்போது இருக்கக்கூடிய நம்முடைய கழகத் தலைவர், முதலமைச்சருக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய ஒரு அமைச்சர்தான் நம்முடைய நேரு. அவரும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான். அன்பிலாருடைய பாரம்பரியத்தைச் சேர்ந்த அமைச்சர், எனக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த ஊரும் இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது.
இன்றைக்கு நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை என இரண்டு முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களைத் தந்திருப்பதும் இந்த லால்குடி தொகுதிதான்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் திராவிட மாடல் அரசின் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விடியல் பயணத் திட்டமாக இருக்கட்டும், பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவுத் திட்டமாக இருக்கட்டும், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், பத்து லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என பல திட்டங்கள் உள்ளன.
இவை அனைத்திற்கும் மேலாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிற திட்டம்தான் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்'. இந்தத் திட்டத்தில் இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் நம்முடைய முதலமைச்சர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.
இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் முதலமைச்சர் என்ன சொன்னார்? நான் கொடுக்கிற 1000 ரூபாயை நீங்க நிப்பாட்டப் பார்க்கிறீங்களா, இனிமேல் நான் 5000 கொடுக்கிறேன் என்று சொன்னார்.
அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குச் சேர்த்து 3000 ரூபாயுடன், கோடைக்கால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5000 ரூபாயை இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு நம்முடைய முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
அதுமட்டுமில்ல, மீண்டும் நம்முடைய கழக ஆட்சி அமைந்தவுடனே மகளிர் உரிமைத் தொகையை 1000 ரூபாயில் இருந்து உயர்த்தி மாதம் 2000 ரூபாயாகக் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். முதலமைச்சர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது.
தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த லால்குடியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசுக்கு நீங்க அத்தனை பேரும் உறுதுணையாக இருக்கணும். இந்தப் புதிய பேருந்து நிலையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள், இதைச் சுத்தமாகப் பராமரிக்க நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






