என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆணவக்கொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
- சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.
- பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லும் நடைபெறுவதாக தெரிகிறது.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லையில் நடந்த சம்பவம் போன்று தமிழகத்தில் பல பகுதிகள் மற்றும் மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் வலியுறுத்தி வருகிறோம். பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியும், உள்துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதி உள்ளோம்.
தேசிய அளவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கின்ற இந்த கொடூரமான படுகொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் பரவலாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு பொருட்படுத்தவில்லை.
உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் இதுபோன்ற கொலைகளை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்துள்ளது. சட்டபேரவையில் அதனை நிறைவேற்றும் வகையில் அதற்குரிய விதிகளை பயன்படுத்த வேண்டும். அதில் காவல்துறையினருக்கு வழிகாட்டுதலை வழங்கி சில நெறிமுறைகளை வரையறுத்துள்ளது. 2018ல் அந்தத் தீர்ப்பையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினரும் நடைமுறைபடுத்துவதில்லை என்பது வேதனை அளிக்கிறது.
இச்சூழலில் இச்சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கும் பொறுப்பு, அதிகாரம் உள்ளது. முதலமைச்சர் இது குறித்து ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சட்டம் இயற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். இதை வலியுறுத்தி வருகிற 9, 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். கிங்டம் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக கூறுகிறார்கள். இதுவரை நான் அந்த படத்தை பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன்.
பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லும் நடைபெறுவதாக தெரிகிறது. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, வெளி மாநிலங்கள் உள்ளவர்களுக்கு பீகார் மாநிலத்தில் வாக்காளர்களாக சேர்த்து அவர்களை வாக்களிக்க செய்வது கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்திருக்கிறார்கள்.
அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இந்தியா கூட்டணி உள்ள கட்சிகள் யாவும் கூறி உள்ளது.
இதனை பாராளுமன்றத்தில் குறிப்பாக விவாதிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. ஜூலை 21-ந் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இதுபற்றி விவாதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தும் ஆளும்கட்சி அதை ஏற்க மறுக்கிறது. அந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகிறோம்.
அவர்கள் அதனை ஏன் விவாதிக்க தயங்குகின்றனர். தமிழகத்திலும் அதுபோன்று செய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதறுகிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறது. அது சுதந்திரமாக இயங்கவில்லை. பா.ஜ.க.வின் முழுமையான கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் சிக்கி உள்ளது.
பா.ஜ.க. எந்த தில்லு முல்லையும் செய்வார்கள். பீகாரில் இதை ஒரு பரிச்சாத்தமாக வெளிப்படையாக செய்கிறார்கள்.
சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற ஒரு நடவடிக்கையாக இது இருக்கிறது. டெல்லியில் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி.யின் கழுத்தில் இருந்த செயினை பதட்டம் இல்லாமல் ஒருவர் பறித்து சென்று இருக்கிறார்.
இது குறித்து புகார் கொடுத்தும் அதனை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. தலைநகர் புதுடெல்லியில் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது நாட்டின் மீதான நன்மதிப்பை உலக அரங்கில் வெளிநாடுகளில் வரக்கூடியவர்களிடையே களங்கத்தை உருவாக்க கூடியதாக இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகள் இணைந்து இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு, சிதறப்போகிறார்கள் என்ற தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் அணியில் இருந்தவர்களே வெளியேறுகிறார்கள் என்றால் அந்த கூட்டணியின் உறுதிப்பாடு எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
வட மாநிலத்தவர்கள் லட்சக்கணக்கில் தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிற சூழலில் அவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளது.
இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.






