என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உதாரணப் படம்
'இது வெறும் வார்த்தைகள் அல்ல... எங்களின் வலி' - பள்ளியிலிருந்து பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவர்கள்... காரணம் என்ன?
- பலரும் தங்களின் உள்ளங்களில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
- தபால் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், அதே வேளையில் போதைக்கு எதிராகவும் களத்தில் இருக்க வேண்டும்
உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு காலத்தில் கடிதம்தான் தொலைத்தொடர்பு சாதனமாக இருந்தது. நாளடைவில் வளர்ந்து வரும் நவீன உலகில் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள், சமூக வலைதளங்கள் என கருத்துக்களை பரிமாற்றம் செய்ய ஏராளமான வசதிகள் வந்துவிட்டது.
இருப்பினும் தபால் கடிதங்களை மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்லவும், அந்த கடிதம் எழுதும் பழக்கத்தின் மூலம் பெற்றோர் உள்ளிட்ட பலரிடம் இருக்கும் போதை பழக்கங்களில் இருந்து அவர்கள் விடுபடவும் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தான் இந்த கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என யார் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறார்களோ, அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து உடனடியாக விடுபட்டு இந்த சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.
பல மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்தில் குடும்பத்தில் பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை மற்றும் அதனால் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிடும் நிலை குறித்தும், வாழ்வில் தினம் தினம் தங்கள் அனுபவிக்கும் வலிகளை வரிகளாக உணர்ச்சி பொங்க எழுதி இருந்தனர்.
நான் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சியை கூட பகிர்ந்துகொள்ள முடியாத அளவில், நீங்கள் போதைப் பழக்கத்தால் ஆட்படும் நிலை மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று மாணவிகள் தங்களின் தந்தைக்கு கடிதம் எழுதி இருந்தனர். தங்களின் இன்ப துன்பங்களை மாணவ, மாணவிகள் கடிதங்களில் எழுதி இருந்ததோடு, "வெறும் வார்த்தைகள் அல்ல எங்களின் வலிதான் இந்த வரிகள் என்பதை புரிந்து உடனே மனம் திருந்தி போதை பழக்கத்தில் இருந்து விடுபடுங்கள்" என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அவர்கள் எழுதி இருந்த கடிதங்களில் பலரும் தங்களின் உள்ளங்களில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் தாங்கள் எழுதிய கடிதங்களை போதை பழக்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக தபால் நிலையத்தில் சென்று அஞ்சல் பெட்டியில் செலுத்திவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றனர்.
மாணவ-மாணவிகள் தபால் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், அதே வேளையில் போதைக்கு எதிராகவும் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஏற்கனவே இதுபோன்று மாணவ, மாணவிகள் இதே பள்ளியில் கடிதம் எழுதியதின் பயனாக சில பெற்றோர் தங்களின் போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்தனர் என்பது குறிப்பித்தக்கது.






