என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவுங்கள்- நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்
- அனைத்து தரப்பினரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- ஒரு நபரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பின், அதை அடையாளம் கண்டு நீக்க வலியுறுத்துங்கள்.
சென்னை:
புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர்களின் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பொது மக்களின் தேவையறிந்து தமிழக வெற்றிக்கழகத்தினர் செயல்பட உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு தொலைபேசி வாயிலாக விஜய் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவர், 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்தான் நாம் சந்திக்கும் முதல் தேர்தல். எனவே இந்த முதல் தேர்தலையே சவாலாக எடுத்துக்கொண்டு, நாம் தீர்மானித்த இடத்திற்கு வர இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை நீக்குங்கள். அவர்களுக்கு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் எதுவென்றாலும் முன் நின்று உதவுங்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்கள், புதிதாக குடிவந்துள்ளவர்கள் என அனைத்து தரப்பினரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒரு நபரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பின், அதை அடையாளம் கண்டு நீக்க வலியுறுத்துங்கள்.
நீங்கள் இருக்கும் பூத் பகுதியை விட்டு இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரையுங்கள். இதற்கு உரிய படிவத்தை பெற்று பூர்த்திசெய்து, தொடர்புடைய முகாம்களில் வழங்குங்கள். இந்த பணிகளை செய்ய இப்போதே தயாராகி கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, பூத் கமிட்டி, வாக்காளர் சேர்த்தல், திருத்த முகாம் தொடர்பாக நிர்வாகிகளிடம் மாவட்டம் வாரியாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்த இருக்கிறார்.






