என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

TVK | துணை முதலமைச்சர் பேச்சுக்கே இடமில்லை: விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆவதற்கு தான்- செங்கோட்டையன்
- மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.
- தேர்தல் அறிவிப்புக்கு பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவது இதற்கு முன் பார்த்ததில்லை.
கோவை:
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் நடந்த சி.பி.ஐ. விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார்.
முதல்-அமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதையே காட்டுகிறது.
மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழலே நிலவுகிறது.
தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். அந்த மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் சிறந்த வேட்பாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் உள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகம் என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தால் விஜய்க்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வருகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்து கூறும்போது, விஜய் முதல்-அமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார். துணை முதல்-அமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவது இதற்கு முன் பார்த்ததில்லை என்றார்.






