என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்குவது ஏன்?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி
- எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
- ஒரு சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அடித்தளம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. சார்பில் கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை ரத்து செய்யவில்லை. நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை ரத்து செய்யவில்லை.
அதேபோல கடந்த நான்கரை ஆண்டு காலம் மடிக்கணினி வழங்கவில்லை. தற்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல 10 லட்சம் மடிக்கணினியை வாக்கு வங்கி உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
ஒரு சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அடித்தளம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதிலே அடிப்படைக் கல்விக்கான பள்ளிகளில் நாம் சரியான அடித்தளம் அமைத்தால்தான் சரியாக இருக்கும்.
இன்றைக்கு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து தொழிற் கல்வியில் ஒரு சகாப்தம் படைத்தார் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு வாக்களிக்கிற உரிமை உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த அரசு மடிக்கணினி வழங்க அக்கறை செலுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலே நாம் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்காக அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 46-வது வார திண்ணை பிரசாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையான கூட்டணி வெல்வது நிச்சயம் என்று கூறினார்.






