என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த நினைத்தால் தி.மு.க.வுக்கு தோல்வி தான் கிடைக்கும்- ஆர்.பி.உதயகுமார்
- தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
- தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்தார். அதில் பல மருத்துவமனைகளில் கட்டுமான முறைகேடு நடைபெற்றதாக தி.மு.க. வைத்த குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என நீதியரசர்கள் கூறியதில் தி.மு.க. தற்போது பின்வாங்கியுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில், 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டு வந்து அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கி, சமூக நீதியை எடப்பாடி பழனிசாமி காத்தார்.
மக்களுக்காக உழைத்து வரும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி விடலாம் என்று தி.மு.க. நினைத்தால் அதில் தோல்விதான் கிடைக்கும் என்பது தான் தற்போது வந்த மகத்தான தீர்ப்பு மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இன்றைக்கு, தி.மு.க.வின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்கு மகுடம் சூட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்றார்.






