என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமதாஸ் Vs அன்புமணி: பாமகவில் மீண்டும் அப்பா - மகன் மோதல்... முழு பின்னணி
    X

    ராமதாஸ் Vs அன்புமணி: பாமகவில் மீண்டும் அப்பா - மகன் மோதல்... முழு பின்னணி

    • ஒரு நொடியில் பா.ம.க.வை உடைத்தது யார்? வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்தது.
    • பா.ஜ.க.வுடன் கூட்டணி என அன்புமணி அடம்பிடித்தார்

    1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு நிறுவனராக ராமதாஸ் உள்ளார். கட்சியின் தலைவராக ஜி.கே. மணியை, ராமதாஸ் நியமித்தார். இதனிடையே, சென்னை வானகரத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாசை நியமித்தார் ராமதாஸ். அவரது தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பா.ம.க. போட்டியிட்டது.

    இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது அமைந்துள்ளது.

    அன்புமணியின் பேச்சால் ஆத்திரமடைந்த ராமதாஸ், "கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன்" என மேடையிலேயே அன்புமணியிடம் காட்டமாக கூறினார். அன்புமணி உடனே எழுந்து, "என்னை சந்திக்க நினைப்போர், இனி பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்" என சொல்லி எழுந்துச் சென்றார். இதனை தொடர்ந்து, நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து சமாதானம் செய்ததாக தகவல் வெளியானது. இருப்பினும் இருவருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்வதாக கூறப்பட்டு வந்தது.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், "இது நான் ஆரம்பித்த கட்சி. எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக்கொள்கிறேன். பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். கௌரவத் தலைவராக ஜி.கே.மணியை நியமிக்கிறேன்" என்று அதிரடியாக அறிவித்தார்.

    பின்னர் அன்புமணியும் ராமதாசும் ஒன்றாக இணைந்து சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனால் இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர் என்று கூறப்பட்டது. ஆனால் இதனையடுத்து ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளாதது பெரும் பேசுபொருளானது. அன்புமணியின் வற்புறுத்தலால் தான் ராமதாஸ் நடத்திய கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

    இதனையடுத்து, பாமக தொண்டர்கள் மத்தியில் பேசிய அன்புமணி, "கடந்த ஒரு மாதமாகவே தூக்கமில்லை. மன உளைச்சலில் இருக்கிறேன்.நான் என்ன தவறு செய்தேன். இதுநாள் வரை ராமதாஸ் கூறியதை தான் செய்து வந்தேன். ராமதாசின் கனவை நிறைவேற்றுவது தான் என்னுடைய லட்சியம். ராமதாசின் கனவை நிறைவேற்ற பாமக தலைவராக தொடர்ந்து செயல்படுவேன்" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், "மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பி அனுதாபம் பெற அன்புமணி முயற்சிக்கிறார். மேடை நாகரீகம் தெரியாதவர் அன்புமணி. கட்சி நிகழ்ச்சிகளில் காலை ஆட்டிக் கொண்டு இருந்தது சரியா, அழகான கண்ணாடியை அன்புமணி உடைத்து விட்டார். ஒரு நொடியில் பா.ம.க.வை உடைத்தது யார்? வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்தது.

    கட்சியில் கலகத்தை அன்புமணி ஏற்படுத்தினார். அன்புமணியை 35 வயதில் மத்திய மந்தியாக்கியது நான் செய்த தவறு. மைக்கை தூக்கி தலையில் போடுவது போல் அன்புமணி செயல்பட்டார். இனிப்பை தவிர கசப்பான மருந்தை கொடுக்கும் நிலை ஏற்பபட்டது. அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை. உறுப்பினர்கள் பேச்சை கேட்பதில்லை. அன்புமணி ராமதாசை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என கூறினேன். பா.ஜ.க.வுடன் கூட்டணி என அன்புமணி அடம்பிடித்தார். பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், அவரது மனைவியும் எனது காலை பிடித்து அழுதனர். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும். அவர்களும் 6 முதல் 7 இடங்களுக்கு மேலேவே ஜெயித்திருப்பார்கள்.

    எனக்கு பொறுப்பு வேண்டாம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன்"என்று தெரிவித்தார்.

    2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வரும் நிலையில், பட்டாளி மக்கள் கட்சியில் தந்தை- மகன் மோதல் மீண்டும் பொதுவெளியில் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை ஒரு பாதையிலும், மகன் ஒரு பாதையில் பயணிக்க விரும்புகின்றனர் என்று ராமதாஸ் பேச்சிலிருந்து தெளிவாக தெரிகிறது.

    Next Story
    ×