என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை புறப்பட்ட ராமதாஸ்- நிகழப்போவது என்ன?
- என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அன்புமணி கூறியிருந்தார்.
- ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து வருகிறார்.
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வரும் நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை சந்தித்தது.
இதை அடுத்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் மூச்சு உள்ள வரை நான் தான் பா.ம.க. தலைவர் என்றும், அன்புமணியை பார்த்தாலே ரத்தம் ஏறுகிறது என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, பா.ம.க. பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மருத்துவர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகளுக்கு மேல், மன நிம்மதியுடன், நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ஒரு மகனாக அது என்னுடைய கடைமையும் கூட. என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து வருகிறார். அந்த வகையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் அப்போது இருவருக்குமான மோதல் முடிவுக்கு வரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டார். தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ள ராமதாஸ், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் எம்.எல்.ஏ. அருள் ஆகியோரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.






