என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கனமழையிலிருந்து மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
    X

    கனமழையிலிருந்து மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

    • தாமிரபரணி ஆற்றிலும், குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது.
    • தண்ணீர் தேங்கி இருக்கின்ற அனைத்து இடங்களும் ராட்சத குழாய் வைத்து தண்ணீரை அகற்ற வேண்டும்.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை நேற்றிலிருந்து பெய்து கொண்டிருக்கிறது.

    கனமழையின் காரணமாக அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

    அது மட்டும் இல்லாமல் தாமிரபரணி ஆற்றிலும், குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு உடனடியாக மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்குமிடம், உணவு, மருந்து மாத்திரை பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர், உடுத்த உடை ஆகியவற்றை வழங்கி உரிய பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.

    தண்ணீர் தேங்கி இருக்கின்ற அனைத்து இடங்களும் ராட்சத குழாய் வைத்து தண்ணீரை அகற்ற வேண்டும். எவ்வளவு பெரிய மழை வந்தாலும் நாங்கள் சமாளிப்போம் என்று வெறுமன பேச்சில் இல்லாமல் செயலில் ஈடுபட்டு தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசினுடைய கடமையாகும்.

    இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளையும், பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இந்த அரசு நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×