என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் - அன்புமணி
- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 6 ஆண்டுகள் ஆனது மட்டும் தான் ஒரே வருத்தம்.
- இந்த தீர்ப்பினை அடுத்து பாதிக்கப்படும் பெண்கள் முன்வந்து புகார் கொடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 6 ஆண்டுகள் ஆனது மட்டும் தான் ஒரே வருத்தம். இன்னும் விரைவில் தீர்ப்பு வந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும்.
இந்த தீர்ப்பினை அடுத்து பாதிக்கப்படும் பெண்கள் முன்வந்து புகார் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.85 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது போதுமானது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ரூ. 1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.






