என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

GST வரி மாற்றத்திற்கு என்ன காரணம்: பீகார் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா? - ப. சிதம்பரம் கேள்வி
- GST சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது
- கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது
தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவே கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் வேண்டுகோள்கள் உங்கள் காதுகளுக்கு கேட்கவே இல்லை.
இப்போது ஜி.எஸ்.டி. வரியில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசை தூண்டியது எது?
மந்தமான பொருளாதார வளர்ச்சியா? வீட்டுக் கடன் அதிகரிப்பா? வீட்டு சேமிப்பு குறைவதா? பீகாரின் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா? அல்லது இவை அனைத்துமா?






