என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 2½ லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க வாய்ப்பு
- ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.
- சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.
சென்னை:
பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' எனப்படும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கியது.
இந்த திட்டத்தின் கீழ் ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. கியாஸ் அடுப்பு, டெபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர், முதல் சிலிண்டர் ஆகியவற்றின் செலவை மத்திய அரசு ஏற்கிறது. சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கியாஸ் இணைப்புகளை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 10 சதவீதம் அதாவது, 2½ லட்சம் இணைப்புகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிதாக இலவசமாக வழங்கப்பட உள்ள 25 லட்சம் கியாஸ் இணைப்புகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இணைப்பு என்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கியாஸ் இணைப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன' என்றார்.






