என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. உரிமை மீட்பு கழகம் தனிக்கட்சியாக மாறுகிறதா? ஓ.பன்னீர்செல்வம் 15-ந்தேதி முக்கிய முடிவு
    X

    அ.தி.மு.க. உரிமை மீட்பு கழகம் தனிக்கட்சியாக மாறுகிறதா? ஓ.பன்னீர்செல்வம் 15-ந்தேதி முக்கிய முடிவு

    • ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
    • ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க.வும் தயாராகி உள்ளது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

    இதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. மேலும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

    ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.

    இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. டெல்லி சென்று திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருந்தார். இது போன்ற பரபரப்பான சூழலில் தான் சென்னை வானகரத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அது பற்றி யாரும் பேசவும் இல்லை.

    அதே நேரத்தில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் சிலர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய முடிவை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது போன்ற நிலை உருவாகி இருக்கிறது.

    இவர்களில் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சி நடத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சியை தொடங்காமலேயே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்பதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற தனி அமைப்பை அவர் நடத்தி வருகிறார். இது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத அமைப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உரிமை மீட்பு குழுவை உரிமை மீட்பு கழகம் என ஓபிஎஸ் மாற்றியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் அவரை சேர்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு பொதுக்குழுவில் கதவடைக்கும் சூழலை ஏற்படுத்தி இருப்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க.வில் இணையவே முடியாத சூழல் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை புதுக்கட்சியாக மாற்றலாமா? என்பது பற்றியும் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதுபோன்ற நிலை ஏற்பட்டால் புதுக்கட்சியை தொடங்கி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஓ. பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிச்சயம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஒருவேளை அது போன்ற சூழல் ஏற்படாவிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிய முடிவை பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவர் கூறினார்.

    Next Story
    ×