என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நடைபயணத்திற்கு தடையில்லை - அன்புமணி தரப்பு விளக்கம்
- அன்புமணி என்னிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை.
- நடைபயணத்திற்கு காவல்துறை தடை விதித்ததாக செய்திகள் வெளியான நிலையில், டி.ஜி.பி.யின் சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது.
நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அதன்படி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் நேற்று தொடங்கினார். அவர், 100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பா.ம.க. நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்த பயணத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்தார்.
'நான்தான் பா.ம.க. நிறுவனர். அன்புமணி என்னிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை. அவருடைய நடைபயணம் பா.ம.க.வில் மேலும் குழப்பத்தை உண்டாகும். சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கும் வழிவகுக்கும். எனவே அவருடைய இந்த பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்கக் கூடாது. தடை விதிக்க வேண்டும்' என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் நடைபயணத்திற்கு காவல்துறை தடை விதித்ததாக செய்திகள் வெளியான நிலையில், டி.ஜி.பி.யின் சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நடைபயணத்திற்கு தடையில்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் ரத்து என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம் என்றே டி.ஜி.பி. அறிக்கையில் உள்ளது. நடைபயணத்திற்கு அனுமதி ரத்து என டி.ஜி.பி. குறிப்பிடவில்லை என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






