என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியால் சிறுபான்மை ஓட்டு பாதிக்கப்படாது- நயினார் நாகேந்திரன்
- கொங்கு பகுதியில் இனி தோட்டத்து பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- இதுவரை தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
கோவை:
கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர் செல்லும் நிலைமை தான் உள்ளது.
ஈரோடு சிவகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்த முதிய தம்பதியர் கொல்லப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை அளிக்கிறது. மேலும் இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாயை விஷம் வைத்து கொன்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பல்லடத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. அங்கும் கொலை சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு இங்கு நடந்ததை போன்று வளர்ப்பு நாயை விஷம் வைத்து கொன்றுள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இந்த 2 சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது நாம் தமிழ்நாட்டில் தான் உள்ளோமா அல்லது வேறு எங்கேயாவது உள்ளோமா என்று தெரியவில்லை.
கொங்கு பகுதியில் இனி தோட்டத்து பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறைக்கு வந்த அனைவரையும் அவர்கள் ஊருக்கு அனுப்புகிறார்கள். இந்த சம்பவங்களில் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வங்காளதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை கைது செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. ஆனால் இதுவரை தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
தி.மு.க அரசு எப்போதுமே, யார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார்களோ, அப்படி புகார் அளிப்பவர்களையே பிடித்து உள்ளே போடுவது தான் வாடிக்கை. அதுபோலத்தான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடந்துள்ளது.
அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மை ஓட்டுகள் பாதிக்கப்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், அ.தி.மு.க.-பாஜ.க கூட்டணியை வரவேற்று பேசிய அ.தி.மு.க நிர்வாகியை ஐக்கிய ஜமாத் அமைப்பு நீக்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்து பேசும்போது, ஜமாத் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தான் பேச இயலாது. அனைவரும் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ஏ.பி.முருகானந்தம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கேசவவிநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.






