என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆர்ப்பாட்டத்திற்கு சீமான் அழைப்பு... நாம் தமிழர் கட்சியினரை கைது செய்த போலீஸ்
- ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
- மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! என்று எக்ஸ் தளத்தில் சீமான் கூறியிருந்தார்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. இருந்தபோதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு தொண்டர்களுக்கு எக்ஸ் தள பதிவு மூலம் சீமான் அழைத்து விடுத்தார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள பதிவில்,
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை ஒன்றிணைந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவிருக்கின்றது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.






