என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஆகஸ்ட் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்
- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை:
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.
திரு.வி.க.நகர் பஸ் நிலையம், அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், பெரியார் நகர் பஸ் நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மகாபலிபுரம், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பஸ் நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பெரியார் நகர் மற்றும் திரு.வி.க. நகர் பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும் பொழுது வடசென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி ஆகி இருக்கும்.
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறுவது, தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, அண்ணாமலையை மேடை ஏற சொல்லுங்கள் சொன்னதை எத்தனை செய்துள்ளோம் சொல்லாததை எத்தனை செய்துள்ளோம் என்று பட்டியலிடுகிறோம், குறை சொல்லக்கூடிய தளத்தில் இருப்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். அரசியல் களம் வேண்டும் என்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை போன்றோர் சொல்லிக் கொண்டு உள்ளார்கள், நடுநிலையாளர்கள் இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள், வசை பாடியவர்கள் கூட இந்த ஆட்சியை வாழ்த்துகிறார்கள்.
முடிச்சூர் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் வழக்கை இறுதிக்கு கொண்டு வந்து முடிச்சூர் பஸ் நிலையத்தை ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






