என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா எம்.பி. சீட்: அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது உண்மை - எல்.கே.சுதீஷ்
- ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அ.தி.மு.க. சார்பில் வாய்மொழி உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக தாங்கள் கூறவில்லை என கூறினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது. அப்போது தே.மு.தி.க.வுக்கு 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க. ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட்டு தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்ததாக கூறப்பட்டது. இதனை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் உறுதி செய்தார்.
ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அ.தி.மு.க. சார்பில் வாய்மொழி உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக தாங்கள் கூறவில்லை என கூறினார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க. கூறியது உண்மைதான் என்று அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ஒரு ராஜ்ய சபா எம்.பி. சீட் தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது முழுக்க முழுக்க உண்மை.
அ.தி.மு.க. அளித்த உத்தரவாதத்தால்தான், 2024 பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.






