என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை - மு.க.ஸ்டாலின் வேதனை
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
- மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.
உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார். மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.






