என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேதாரண்யம் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியா?
- தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது.
- கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் வேட்பாளராக களம் காண இருக்கிறார்.
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. இதையடுத்து வரும் 27-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான முன்னெடுப்புகளை அந்த கட்சி தொடங்கியுள்ளது. மறுபக்கம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் 80 சதவீதம் பேர் மாவட்ட செயலாளர்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர மாநில நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிகிறது.
இதில் வில்லிவாக்கம் தொகுதியில் சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் வேட்பாளராக களம் காண இருக்கிறார்.
இதேபோல், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரபல தியேட்டர் அதிபரின் மகனும், வாசுதேவநல்லூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும், த.வெ.க. வேட்பாளர்களாக களம் இறங்க அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், கட்சியின் தலைவரான விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று ஒரு விவாதமே தமிழக அரசியல் களத்தில் நிலவி வருகிறது. தற்போது விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து நம்பகமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் களம் காண இருக்கிறார்.
வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.
வேதாரண்யம் தொகுதி மீனவர்கள், விவசாயிகள் நிறைந்த தொகுதி. இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் இந்த தொகுதியில் உறுதியாக களம் காண்பார் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






