என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'திமுக வேண்டாம் என்றால், யார் வேண்டும் என்பதை விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்' - அண்ணாமலை!
- சிந்தாந்தரீதியில் அதிமுகவிற்கும் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
- சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்?
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,.
திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் கூறுகிறாரே என்ற கேள்விக்கு,
தமிழ்நாட்டில் நான்கு பிரதான கட்சிகள் இருக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ உள்ளது; தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது; சீமானின் நாம் தமிழர் உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கூட்டணியை பொறுத்தவரை அனுபவம் உள்ளது; பிரதமரின் ஆசிர்வாதம் உள்ளது. ஜன.23 அன்று பிரதமரின் தேர்தல் பரப்புரை சென்னை அருகில் தொடங்க உள்ளது. அதனால் எங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.
தலைவர்களை தாண்டி அண்ணாமலையின் எண்ணம் என்ன, விஜய் கூட்டணிக்குள் வருவது குறித்து என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,
நான் எதுவும் நினைக்கவில்லை. அதற்கான முடிவை தலைவர்கள் எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியின் இலக்கு என்ன என்பதை பார்க்கவேண்டும். சீமானைப் பொறுத்தவரை திராவிட கட்சிகள் வேண்டாம். விஜய் திமுக வேண்டாம் என்றும் நினைத்தால், யார் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எங்களுக்குள் கொள்கை முரண்பாடு இருந்தாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. சிந்தாந்தரீதியில் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
விஜய் வந்தால் உங்கள் கூட்டணி பலம் வாய்ந்ததாகும் என தலைமையிடம் கூறுவீர்களா?
நான் தலைமையிடம் எதுவும் கூறுவதில்லை. முரண்பாடு இருப்பவர்களை அழைத்து ஒரே இடத்தில் வைத்துக் கொள்வதும் பிரச்சனைதான். எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பினால் கூட்டணிக்குள் கெமிஸ்ட்ரி இருக்காது. விஜய்யின் அரசியல் விஜய்க்கு, எங்களின் அரசியல் எங்களுக்கு.
நான் விஜய்யை சாதாரணமாக எடைபோடவில்லை. முதல் நாளிலிருந்து இதைக்கூறுகிறேன். அவர் ஒரு மாஸ் ஸ்டார். செங்கோட்டையன் உட்பட நிறைய தலைவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். எல்லா இடங்களிலும் கிளைக்கழங்களை நிறுவிவருகின்றனர். தொண்டர்கள் களப்பணியில் உள்ளனர். அதுபோலத்தான் சீமானும். சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்? நாடாளுமன்ற தேர்தலில் 8.5 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ளார். சீமான் இந்த தேர்தலில் எவ்வளவு வாக்குவாங்குவார், வெற்றிப்பெறுவார் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். யாரையும் லேசாக எடைப்போடக்கூடாது. எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது.
சீமானின் கட்சி வலிமையானதா?
யாரையும் உதாசீனப்படுத்தக்கூடாது என்பது என்னுடைய கருத்து. எல்லோருமே தலைவர்கள். எல்லோரும் வாக்குகளை பெறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி இத்தனை சதவீதம் வாக்கு வாங்கியுள்ளது என்றால், அதனை தட்டி தூசிபோல் பேசக்கூடாது. அவர்களுக்கும் வாக்குவங்கி, வேறுபட்ட எண்ணங்கள் உள்ளன. மக்கள் மனதிலும் ஓட்டம் உள்ளது. இன்று நான்குமுனை போட்டி உள்ளது. அடுத்த அறுபது நாட்களில் 2 முனை போட்டியாக மாறும்.
பாமக, தேமுதிக குறித்து பேசாதது ஏன்?
பாமக எங்கள் கூட்டணியில் உள்ளது. தேமுதிக தனியாக போவதாக கூறுகிறார். மருத்துவர் ராமதாஸ் நல்லமுடிவை எடுப்பார். அதுபோல பிரேமலதா விஜயகாந்தும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்." என தெரிவித்தார்.






