என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'அ.தி.மு.க தொண்டர்கள் மீது நான் உண்மையாகவே பரிதாபப்படுகிறேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கேட்பதற்கெல்லாம், ‘நோ’ சொல்லும் NDA-வுக்கு, தமிழ்நாடும் ‘நோ’தான் சொல்லும்.
- அ.தி.மு.க. என்ற கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இன்று திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் அதிமுக தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"அ.தி.மு.க. கூட்டணி… சாரி… சாரி… அப்படி சொன்னால், மோடியும், அமித் ஷாவும் கோபித்துக் கொள்வார்கள். N.D.A. கூட்டணி என்று சொல்ல வேண்டும். கூட்டணிக்குப் பெயர் வைக்கக் கூட முடியாத நிலையில்தான், இன்றைக்கு அ.தி.மு.க. இருக்கிறது. சரி அவர்கள் சொல்வது போன்று, அந்த N.D.A. கூட்டணி தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறது?
கடந்த 5 ஆண்டுகளில், நமக்கு தர வேண்டிய கல்வி நிதி, ஜல் ஜீவன் திட்ட நிதி, நூறு நாள் வேலைத்திட்ட நிதி, பேரிடர் நிவாரண நிதி என்று நாம் கேட்ட எதையும் தரவில்லை. மாநிலத்திற்கான சிறப்புத் திட்டங்களையும் தரவில்லை. ஏன், கோவை, மதுரை, திருச்சி மெட்ரோ உள்ளிட்ட எந்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அனுமதி தரவில்லை.
ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால், அடிப்படையாக மாநிலத்துக்குக் கேட்டதையாவது அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குத் தந்ததெல்லாம் என்ன தெரியுமா? ஆளுநர் மூலமாகக் குடைச்சல், மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, மிரட்டிப் பார்க்க ரெய்டுகள், இப்படிப்பட்ட ஆட்சிதான், பிரதமர் மோடி சொல்லும் N.D.A. ஆட்சி. தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்கள்தான், நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்.
தமிழ்நாடு மீது எந்த அளவிற்கு வன்மம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், தேர்தல் வருகிறதே என்று கூட தெரியாமல், அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், நமக்கான எதையும் அறிவிக்க இவர்களுக்கு மனது வரவில்லை. நான் கேட்கிறேன்… இப்படி திட்டமிட்டுத் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்ற N.D.A. கூட்டணிக்கு, எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?
எந்த நம்பிக்கையில் நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள்? தமிழ்நாடு கேட்பதற்கெல்லாம், 'நோ' சொல்லும் NDA-வுக்கு, தமிழ்நாடும் 'நோ'தான் சொல்லும். இங்கே உங்களுக்கு எப்போதும் 'நோ எண்ட்ரி' தான். உங்கள் டப்பா எஞ்சினுக்கு தமிழ்நாடு எப்போதுமே, 'No Entry'-தான் சொல்லும்.
சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். இந்தத் தேர்தல், தமிழ்நாடு vs NDA இன்னும் சொன்னால், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று பார்க்கும் தேர்தல் சொன்னேன். உடனே நம்முடைய எதிரிகள் என்ன சொன்னார்கள்? இது சட்டமன்றத்துக்கு நடக்கும் தேர்தல்தானே? இதை ஏன் தமிழ்நாடு Vs NDA என்று தி.மு.க. சொல்கிறது? தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று ஏன் ஸ்டாலின் சொல்கிறார் என்று கேட்கிறார்கள்.
தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் வரும் கட்சியல்ல. மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. எங்களுக்குத் தெரியும்; தமிழ்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், உண்மையான எதிரி யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும், திராணியும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க என்பது மக்களுக்கும் நன்றாக தெரியும்!
அ.தி.மு.க. என்கிற முகமூடியை போட்டுக் கொண்டு வந்தால், எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்களின் முகத்திரையைக் கிழித்து, தமிழ்நாட்டு மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து, விழுங்கிடலாம் என்று நினைக்கிறது காவிக் கூட்டம். எங்கள் கருப்பு - சிவப்புp பட்டாளம் இருக்கிறவரை அது நடக்கவே நடக்காது. நடக்க விடமாட்டோம். இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
அதனால்தான், அ.தி.மு.க. என்ற கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள். அரசியலில் நேர் எதிராக இருந்தாலும், அ.தி.மு.க தொண்டர்கள் மீது நான் உண்மையாகவே பரிதாபப்படுகிறேன். அவர்களுடைய உணர்வுக்கு மாறாக கட்சியைக் கொண்டு போய் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. தன் சொந்த நலனுக்காக, சுயலாபத்துக்காக, எப்படியாவது முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நப்பாசையில், பழனிசாமி அடிமையாகக் கிடக்கிறார். அவரை வைத்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அழிக்கும் வேலையை பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது. " என தெரிவித்தார்.






