என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள்ளக்காதலன் மூலம் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி- போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்
    X

    கள்ளக்காதலன் மூலம் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி- போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனைவியே கணவனை கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மங்கலம் ரோடு, தாமரை கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி க்கொன்றனர்.

    இதையடுத்து ரமேசின் மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவினாசியை சேர்ந்த சையது இர்பான் (24) என்பவர் தனது நண்பர் ஜானகிராமன் மூலம் ரூ.8 லட்சம் பணம் கொடுத்து ரமேசை கொலை செய்ய கூறியதும், இதைத்தொடர்ந்து கூலிப்படை மூலம் ரமேஷ் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சையது இர்பான், ஜானகி ராமன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் ரமேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக ரமேஷின் மனைவி விஜயலட்சுமி (40) கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ், மனைவி விஜயலட்சுமியின் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் பணம், தொழில் என்று எப்போதும் இருந்துள்ளார். பாசமாக இல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அவினாசியில் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வரும் சையது இர்பான் கடைக்கு விஜயலட்சுமி அடிக்கடி சென்று ஸ்நாக்ஸ்கள் வாங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. கணவன் அன்பாக இல்லாததால் விஜயலட்சுமி இர்பானுடன் நெருங்கி பழகினார். தினமும் செல்போன் மூலம் பேசிக்கொண்டனர்.

    ரமேஷ் வெளியூர் சென்றிருந்த நேரங்களில் இர்பானை வீட்டிற்கு அழைத்து விஜயலட்சுமி உல்லாசமாகவும் இருந்துள்ளார். இந்தநிலையில் 2 பேரின் கள்ளக்காதல் விவகாரம் ரமேஷிற்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். இது குறித்து இர்பானிடம் தெரிவிக்கவே, அவர் தனது நண்பர் ஜானகிராமன் இருக்கிறார். அவர் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவோம் என்று 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பணம் செலவாகும் என இர்பான் கேட்கவே, விஜயலட்சுமி வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை இர்பானிடம் கொடுத்துள்ளார். அவர் அவினாசியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அதில் ரூ.4 லட்சத்தை முதல் கட்டமாக ஜானகி ராமன் மூலம் கூலிப்படைக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை வழக்கு செலவுக்கு செலவழிக்க வைத்திருந்தார். ஜானகிராமன் 5 பேர் அடங்கிய கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். கொலை நடந்த அன்று ரமேஷ், வீட்டிலிருந்து நடைபயிற்சிக்கு சென்ற தகவலை விஜயலட்சுமி, இர்பானிடம் கூறவே, கூலிப்படையினர், அங்கு சென்று ரமேசை வெட்டிக்கொன்றுள்ளனர். இர்பானுக்கும், ரமேசுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்திய போது இந்த தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவனை கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×