என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை பாலியல் வன்கொடுமை: துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா?-  முன்னாள் அமைச்சர் வளர்மதி
    X

    கோவை பாலியல் வன்கொடுமை: துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா?- முன்னாள் அமைச்சர் வளர்மதி

    • சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
    • இந்த சம்பவத்தில் 3 குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளதாக கூறி உள்ளனர்.

    கோவை:

    கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணி சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமை தாங்கினார். மகளிர் அணி நிர்வாகிகள் லீலா உண்ணி, விமலா கண்ணம்மாள் முன்னிலை வைத்தனர். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மகஸே்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் முட்புதரில் தூக்கி வீசி உள்ளனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார். அவர் கதறி அழுத பின்னரும் வக்கிர புத்தியுள்ள அந்த கும்பல் அவரை விடாமல் சீரழித்துள்ளது.

    இந்த சம்பவத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்பேரில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த சம்பவத்தில் 3 குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்களை யாருக்கும் காட்டவில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா அல்லது போலி குற்றவாளிகளாக என்ற சந்தேகம் உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. தலைவர்கள் கண்டித்துள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் கவர்னரை சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்.பி. இதுவரை வாய் திறக்கவில்லை. அதேபோல கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. தி.மு.க. ஆட்சியில் 4150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாநகரம் தொழில் நகரம். இங்கு ஏராளமானோர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் பிரபாகரன், சிங்கைபாலன்,ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×