என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் பூஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினருக்கு தேர்தல் பயிற்சி
- கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார்.
- ஒவ்வொரு 100 வாக்குகளுக்கும் ஒருவர் என 6 லட்சம் பூத் கமிட்டியினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பி.எல்.ஏ.-2 தி.மு.க. முகவர்களை நியமித்து உள்ளார். அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வை பலப்படுத்தும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பு மூலம் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்த்துள்ளார்.
இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து அவற்றை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக பயிற்சி கூட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 'கான்புளூயன்ஸ்' அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தலைகுனியாது 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற பரப்புரையை தி.மு.க. தொடங்கிடும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் இந்த பயிற்சிக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மாவட்டக் கழக செயலாளர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநகரச் செயலாளர்கள், ஒன்றிய நகர பகுதி கழகச் செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் என சுமார் 3 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தலைகுனியாது 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை செய்யப்படும் விதம் குறித்து விரிவாக விளக்கம் அளித்து பேசினார். அப்போது ஒவ்வொரு 100 வாக்குகளுக்கும் ஒருவர் என 6 லட்சம் பூத் கமிட்டியினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
அதன் பிறகு பிரசார விளக்க காணொலி திரையிடப்பட்டது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்புக்கான செயலியில் உள்ள அம்சங்கள் பற்றி விளக்கங்களும் செயலி விளக்க காணொலி மூலம் விளக்கப்பட்டது.
இந்த விளக்க காணொலியுடன் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பயிற்சி அளித்தார்.
அதன் பிறகு மாவட்டச் செயலாளர், தொகுதி பார்வையாளர் ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
கூட்ட முடிவில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நன்றி கூறினார்.






