என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

109 உணவு வகைகளுடன் நயினார் நாகேந்திரன் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து
- இந்த விருந்தில் 109 வகையான சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கூட்டணியை மேம்படுத்தும் வகையில் தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தை போல் உணவு வகைகளை வடிவமைத்து பரிமாறப்படுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது இருந்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
இதில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முடிவான நிலையில் இருகட்சியினரும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அதன்படி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற புரட்சி பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இதற்காக மாவட்டம் தோறும் அவர் சென்று பிரசாரம் செய்யும் இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவில் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வந்து சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார்.
இன்று பிரசாரம் எதுவும் இல்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட விருந்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
இந்த இரவு விருந்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் முத்துபலவேசம், தமிழ்செல்வன், சித்ராங்கதன், விஸ்வை ஆனந்தன் உள்பட தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, ராஜலெட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த விருந்துக்காக நயினார் நாகேந்திரன் வீட்டில் சுமார் 10 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் பல வண்ண விளக்குகள், இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் 109 வகையான சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெஜ் சூப், முருங்கைக்காய் சூப் உள்ளிட்ட 4 வகை சூப், சாலட், குழிப்பனியாரம் உள்பட 9 வகை ஸ்டாட்டர்ஸ், 3 வகை பர்பிக்யூ, 5 வகை சாட் உணவுகள், திருநெல்வேலி அல்வா, காசி அல்வா, பலாப்பழ மைசூர்பாக், பால் கொழுக்கட்டை உள்ளிட்ட 11 இனிப்பு வகைகள், 3 வகை போளி, வேக வைத்த 8 வகை உணவுகள், 4 ரொட்டி வகைகள், 8 வகை அமரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், 8 வகையான சைடு டிஷ், 6 வகை பபே வகைகள், 15 வகை தோசைகள், 17 வகையான ஐஸ்கிரீம், 7 வகையான இயற்கை பழவகை ஜூஸ்கள் உள்பட 109 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன.
கூட்டணியை மேம்படுத்தும் வகையில் தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தை போல் உணவு வகைகளை வடிவமைத்து பரிமாறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே ஒற்றுமை பலமாக இருப்பதை நிரூபிக்கும் வகையிலும், 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே ஒரு நெருக்கத்தையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்த விருந்துக்கு நயினார் ஏற்பாடு செய்துள்ளார்.
தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசனையும் நடத்தப்படுகிறது.






