என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • நோய்வாய்ப்படும் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • காலை 10 மணியளவில், மேல்விஷாரம் கத்துவாடி கூட்டு ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம், மேல் விஷாரம் அண்ணாசாலை மெயின் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான ஆட்சியில், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 30 படுக்கை வசதிகளைக் கொண்ட முழு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, கழக அரசின் சாதனையை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டி, 23.2.2025 அன்று இந்த மருத்துவமனையை தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்று முதல் இம்மருத்துவமனை முறையான பராமரிப்பு இன்றி இயங்கி வந்த நிலையில், தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வுக்குச் சென்றபோது, மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் பணியில் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நோய்வாய்ப்படும் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்நிலையில், மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப்போக்கோடு இருந்து வரும் தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், அ.தி.மு.க. ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தின் சார்பில், 10-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், மேல்விஷாரம் கத்துவாடி கூட்டு ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், தலைமையிலும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×