என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும்- ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்
    X

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும்- ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்

    • 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.
    • தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

    ம.தி.மு.க. 31-வது பொதுக்குழு இன்று காலை 10 மணி அளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் 28 நிறைவேற்றப்பட்டன.

    * 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.

    * 2026 சட்டப்பேரவை தேர்தலில் கழகம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும். இந்த ஆண்டு அறிஞர் அண்ணா 117-வது பிறந்த நாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்துவது.

    * பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்.

    * கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும்.

    * தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்புகளை மேம்படுத்தி ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் கல்வி நலனை பேணி பாதுகாக்க வேண்டும்.

    * மருத்துவ காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். முழு மதுவிலக்கு என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.

    * பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் மாத இறுதி வரையாவது நீக்க வேண்டும். பருத்தி விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறை ஏற்புடையதல்ல. அவற்றை நீக்கினால் செயற்கை இழை ஜவுளித்தொழில் மிக சிறப்பான வளர்ச்சி பெறும்.

    * ரசாயன கழிவு நீரை காகித ஆலைகள் பவானி நதியில் கலப்பதால் பவானி ஆற்றில் வரும் நீர் ரசாயன கழிவுநீராக மாறி உள்ளது. இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோய் மற்றும் இதர தோல் நோய்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    * இதனை ம.தி.மு.க.வும், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் செய்தி ஊடகங்களும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் எடுத்துச்சென்று உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதனைக் கருத்தில் கொண்டு பவானி நதியைக் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையின் கழிவு நீரால் சேதமடைந்துள்ள நிலத்தடி நீர்வளத்தை சீர்செய்திட அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தைப் போல ஒரு சிறப்பு திட்டத்தை பெருந்துறை வட்டத்தில் செயல்படுத்திட வேண்டும்.

    * ஈரோட்டின் மாசு கட்டுப்பாட்டை உறுதி செய்து இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும். பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி, கொங்கு மண்டலத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்திட வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தின் பழமையான காளிங்கராயன் கால்வாய் உட்பட மாசடைந்துள்ள கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றை மாசின்றி தூய்மையாகப் பராமரிக்க சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×