என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெளிப்படையுடன் திமுக அரசு இயங்கி வருகிறது - இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு தங்கம் தென்னரசு பதில்
- செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல திமுக அல்ல
- பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமை
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கரூர் தவெக தேர்தல் பரப்புரையில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எதிர்க்கட்சி தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பதட்டத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இத்துயர்மிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.
செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும் போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வழக்கம் போலவே ஓர் உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்குக் காரணம் என்னவென்பதை அரசு அமைத்திருக்கும் ஆணையமும் காவல் துறை விசாரணையும் முறையாக வெளிக்கொணரும் எனச் செய்தியாளர்களிடம் அரசு அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். நடைபெற்ற ஒரு பெரும் துயரச் சம்பவம் குறித்தான உண்மை நிலவரங்களை அரசின் உயர் அலுவலர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது? அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் அத்தகு விளக்கங்களைச் செய்தியாளர்கள் வாயிலாக வெகுமக்களுக்கும் சென்றடையச் செய்வது இத்தகுச் சூழலில் அவர்களின் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தன் வசதிக்காக மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.
நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதைத் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமையும் கூட என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






