என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு
    X

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு

    • காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
    • மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.

    அந்த வகையில் ஆளும் கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் இடம்பெற்று உள்ளன.

    இந்த நிலையில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது.

    இந்த குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த ஐவர் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இக்குழுவினர் சந்தித்து பேசினார்கள். காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

    காங்கிரசில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது போன்று தி.மு.க.விலும் விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது.

    இன்றைய சந்திப்பின் போது கூட்டணி கட்சிகள் இணக்கமாக செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடம் பேசுவதற்கு தி.மு.க. நேரம் ஒதுக்க உள்ளது.

    Next Story
    ×