என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம்: திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது- கமல்
- கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும்.
- அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டும்.
திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 7-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை பார்த்த வி.சி.க.வினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பைக் மீது எனது கார் மோதவில்லை. பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் என்று கூறி இருந்தார். மேலும் எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' எனவும் கூறினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து திருமாவளவனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் திருமாவளவின் சந்தேகம் நியாயமானது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.






