என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம் வினியோகம்
- ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இப்பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரேசன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் ஒரு கோடியே 14 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர். இன்னும் சிலர் தகுதி இருந்தும், இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து காத்துக் கிடக்கின்றனர்.
இதை தொடர்ந்து இத்திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படும் என சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். இதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக வினியோகிக்கப்பட உள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு நடைபெறும் இப்பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் என தகவல் வெளியாகி உள்ளது.