என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ம.க. மாநில செயற்குழு கூட்டத்தில் அன்புமணியின் சகோதரி- முக்கிய பதவி வழங்க ராமதாஸ் திட்டம்?
    X

    பா.ம.க. மாநில செயற்குழு கூட்டத்தில் அன்புமணியின் சகோதரி- முக்கிய பதவி வழங்க ராமதாஸ் திட்டம்?

    • செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர் கலந்து கொண்டனர்.
    • செயற்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இடம்பெறவில்லை.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் பல்வேறு நிர்வாகிகளை புதிதாக நியமனம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிர்வாக குழு கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி போன்ற முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 21 நிர்வாகக்குழு நிர்வாகிகளை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார். அதில் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு அன்புமணி ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.



    அதன்படி இன்று காலை திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். அன்புமணி ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் புறக்கணித்துள்ளார்.

    இதனிடையே, ராமதாசின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் பங்கேற்றுள்ளார். அவர் நிர்வாகிகளுடன் மேடையில் அமர்ந்துள்ளார். அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனுக்கு பதவி அளித்தபோது ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×