தி.மு.க அரசின் மெத்தனத்தாலேயே நெற்பயிர்கள் மழையில் மூழ்கியுள்ளன- அன்புமணி

தி.மு.க அரசு 4 ஆண்டு காலத்தில் நீர்மேலாண்மை, நீர் பாசனத்திற்கு எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை.தி.மு.க தமிழ்நாடுக்கு செய்த முதலீடு வெறும் பொய் தான்.
தி.மு.க அரசின் மெத்தனத்தாலேயே நெற்பயிர்கள் மழையில் மூழ்கியுள்ளன- அன்புமணி
Published on

கோவை:

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க அரசு விளம்பரத்தை மட்டும் தான் செய்கிறது. வேளாண்துறை அமைச்சர் எந்த பிரச்சனையும் இல்லை. 99 சதவீதம் கொள்முதல் செய்துவிட்டோம் என்கிறார். உணவுத்துறை அமைச்சர் அதற்கு ஒருபடி மேலாக போய் விவசாயிகள் எல்லாம் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவிக்கிறார்.

விவசாயிகள் எல்லாம் அழுது கொண்டிருக்கின்றனர். கோபமாக இருக்கின்றனர். விவசாயிகளை பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் முதலமைச்சர் இருக்கிறார். தி.மு.க.வினருக்கு மக்கள் பாடத்தை புகட்டுவார்கள்.

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தி.மு.க அரசின் மெத்தனத்தால் தற்போது பெய்த மழைக்கே மழைநீரில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்களை முறையாக தூர்வாராமல் விட்டு விட்டதால் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

தஞ்சை, திருவாரூர் உள்பட 4 மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டுள்ள குறுவை நெல்லில் 40 சதவீத குறுவை நெல் மட்டும் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதி 60 சதவீதம் கொள்முதல் செய்யப்படவில்லை. தற்போது கொள்முதல் செய்யுமாறு கேட்டால் ஈரப்பதம் என தெரிவித்து வாங்க மறுக்கின்றனர்.

அரசு கொள்முதல் செய்யாமல் விட்டுவிட்டதால் தான் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. விளைந்த நெல் மட்டுமல்ல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லும் சேதம் அடைந்துள்ளது.

தி.மு.க அரசு 4 ஆண்டு காலத்தில் நீர்மேலாண்மை, நீர் பாசனத்திற்கு எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

தி.மு.க தமிழ்நாடுக்கு செய்த முதலீடு வெறும் பொய் தான். தி.மு.க எத்தனை முதலீடு செய்துள்ளது என்பது தொடர்பாக புத்தகம் தயாரித்துள்ளோம். எனது நடைபயணம் முடிந்ததும் அதனை வெளியிடுவோம். கனிமவள கொள்ளையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com