என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணா அறிவாலயம்-சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- அறிவாலயம் முன்பு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
- காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அகன்ற திரையில் தேர்தல் முடிவுகள் ஒளிபரப்பப்பட்டது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அதிக ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் இருப்பதை அறிந்ததும் தி.மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் மகளிர் அணியினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்து ஆட்டம் ஆடினார்கள்.
அறிவாலயம் முன்பு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். டாக்டர் கலைஞர் வாழ்க, வருங்கால பிரதமர் எங்கள் தளபதி வாழ்க என்று கோஷமிட்டனர்.
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அகன்ற திரையில் தேர்தல் முடிவுகள் ஒளிபரப்பப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வமுடன் பார்த்தனர். இந்தியா கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை என்று தெரிந்ததும் ஆரவாரம் செய்தனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.






