search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐகோர்ட்டு உத்தரவுபடி டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறக்க ஆலோசனை
    X

    ஐகோர்ட்டு உத்தரவுபடி டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறக்க ஆலோசனை

    • மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    • நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

    இந்த மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், 'மதுபான விற்பனை நேரத்தை மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனாலும் இது நடைமுறைக்கு இன்னும் வரவில்ல.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் உள்ளதா? என்பதை உதவி சொலி சிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவினர் டாஸ்மாக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்தனர்.

    இதுபற்றி அக்டோபர் 23-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் வகையில், மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது. அனேகமாக மதியம் 2 மணியில் இருந்து 10 மணி வரை கடை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான சாதக, பாதகங்களை அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.

    Next Story
    ×