search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆற்றில் மூழ்கிய உறை கிணறுகளை சீரமைக்கும் பணி தீவிரம்
    X

    ஆற்றில் மூழ்கிய உறை கிணறுகளை சீரமைக்கும் பணி தீவிரம்

    • 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
    • லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளமானது தாமிரபரணி ஆற்றில் கரை புரண்டு ஓடியது.

    இந்த வெள்ளத்தினால் ஆற்றில் குடிநீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த உறைகிணறுகள் மூழ்கியது. பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரையிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் மூழ்கி அதில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் பழுதடைந்தன. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    மேலும் பல்வேறு வகையான கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் எடுத்துச்செல்ல ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குழாய்களும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஒரு சில நாட்களுக்கு பிறகு தற்காலிக ஏற்பாடாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வெள்ளம் சற்று தணிந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த உறை கிணறுகளில் மோட்டார்கள் பழுது பார்க்கப்பட்டு குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக ஆறுகளில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்த கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் தொழில்நுட்ப குழு வரவழைக்கப்பட்டது. அதன்படி 9 பேர் கொண்ட குழு வந்து 2 நாட்களாக குடிநீர் திட்டங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் உறைகிணறுகளை சுற்றிலும் நீர் அதிகமாக இருந்தாலும், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தொழில்நுட்ப குழுவினர் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு பணி செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×